Wednesday 1st of May 2024 01:51:51 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒன்ராறியோவில் வேலைக்குச் செல்ல நிர்ப்ந்திக்கப்பட்ட கணவரால் தொற்றுக்குள்ளான மனைவி  மரணம்!

ஒன்ராறியோவில் வேலைக்குச் செல்ல நிர்ப்ந்திக்கப்பட்ட கணவரால் தொற்றுக்குள்ளான மனைவி மரணம்!


தொழிற்சாலையில் கொரோனா தொற்று பரவல் இருந்தது தெரிந்தும் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட கணவர் மூலம் தொற்றுக்குள்ளான 40 வயதான ஒன்ராறியோ பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்த பெண்ணின் கணவர் பணியாற்றும் தொழிற்சாலையில் தொற்று நோய் பரவியிருந்தது. எனினும் அவர் பணியாற்றும் பிரிவில் ஊழியர்களிடையே தொற்று பரவில்லை எனக் கூறப்பட்டு பணிக்கு வருமாறு அவா் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

பணிக்கு சமூகமளிக்காதவிடத்து அவருக்குரிய சம்பளம் வழங்கப்படாது என நிர்வாகம் தெரிவித்ததால் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் அவர் வேலைக்குச் செல்ல வேண்டி இருந்தது என ஒன்ராறியோ மைக்கேல் கரோன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ பிரிவு பணிப்பாளர் டாக்டர் மைக்கேல் வோர்னர் தெரிவித்துள்ளார்.

தனியுரிமை காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் நிறுவனத்தின் பெயரை வோர்னர் பொது வெளியில் அடையாளப்படுத்தவில்லை.

வேலைத்தளங்களில் ஏற்படும் ஆபத்துக் குறித்து ஏனையோர் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கதையை பகிர்ந்துகொள்வதாக அவா் கூறினார்.

தான் பணியாற்றிய தொழிற்சாலையில் தொற்று நோய் பரவல் இருந்தது தெரிந்தும் பணிக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டதால் அந்த நபருக்கு தொற்று ஏற்பட்டது. அவர் மூலம் அவரது பிரிவில் பணியாற்றும் பலருக்கும் தொற்று பரவியது.

அத்துடன், வீட்டில் அந்தப் பணியாளரின் மனைவி மற்றும் மகளுக்கும் தொற்று பரவியது எனவும் வோர்னர் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளான தொழிலாளியின் மனைவியின் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து உயிரைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிவேண்டியிருந்தது.

அந்தப் பெண் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதால் ரொரண்டோ பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கு மாற்றப்பட்டு 24 மணி நேரத்தின் பின்னர் அவா் உயிரிழந்தார் என மருத்துவர் வோர்னர் தெரிவித்தார்.

இறுதி நேரத்தில் கூட அருகில் இருக்க முடியாமல் சூம் இணைய நேரலை தொழில்நுட்பம் மூலம் குடும்பத்தினர் பார்த்துக்கொண்டிருக்க அந்தப் பெண்ணின் உயிர் பிரிந்தது எனவும் வோர்னர் விபரித்தார்.

இந்தத் துன்பகரமான சம்பவத்தைத் தொடர்ந்து அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கோவிட்19 தடுப்பூசியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.

கோவிட்19 தடுப்பூசி முன்னுரிமைப் பட்டியலில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ரொரண்டோ மேயர் ஜோன் டோரி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கான தகுதியை வயதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீா்மானிக்கக்கூடாது. அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களைக் கருத்தில் கொண்டு தீா்மானிக்க வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டார்.

இந்த மாதத்தில் தொடங்கிய தற்போதைய தடுப்பூசி முன்னுரிமைப் பட்டியலில் அத்தியாவசிய தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாதவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

எனினும் தொடர்ந்தும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரை இலக்காகக் கொண்டே தடுப்பூசி அதிகளவில் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பணியிடங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் விரைவாக தடுப்பூசி போடுவதை மாகாணம் உறுதி செய்ய வேண்டும் என மைக்கேல் கரோன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ பிரிவு பணிப்பாளர் டாக்டர் மைக்கேல் வோர்னர் வலியுறுத்தியுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE